மிகவும் அழகு வாய்ந்ததும், புண்ணியமும் திருவும் நிறைந்துமாகிய"திருமயிலை" என்கிற. மயிலாப்பூர், இந்நாளில் சென்னை நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
தேரோடும் மாடவீதிகளும், தெப்பக் குளங்களும் , வணிக நிறுவனங்களும், உணவுச் சாலைகளும், காய், கனி,மலர் அங்காடிகளும், கல்வி நிலையங்களும், அனைத்து சமய ஆலயங்களும் நெருங்கி அமையப்பெற்ற திருமயிலை இப்போது உள்ளதைப் போலவே மிகவும் பழங்காலத்திலும் சிறப்பும் பொலிவும் பெற்று விளங்கியது.
சென்னை நகரின் வயது, ஃபிரான்ஸிஸ் டே அதனை விலை கொடுத்து வாங்கிய காலத்தைக் கணக்கிட்டு 363 வருடங்கள் என்று கூறப்படுகிறது.
திரு. கே.ஆர்.ஏ. நரசய்யா தமது "மதராசபட்டினம்" என்னும் வரலாற்று நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி தாமல் வெங்கடாத்ரி என்பவர், கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜண்டான ஃபிரானசிஸ் டே என்பவருக்கு மதராச பட்டினத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொள்ளவும் வாணிகம் செய்யவும் ஒரு ஒப்பந்தம் செய்தளித்தார்.
அப்போது அது ஒரு சிறு மீன்பிடி கிராமமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
ஆனால், சென்னையின் ஒரு பகுதியாகிய மயிலாப்பூர் 7ம் நூற்றாண்டிலேயே, சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியிருக்கிறது.
சங்கம் மருவிய காலத்து (சிலப்பதிகாரம்) பூம்புகார் போன்றே வணிகமும் செல்வமும் செழித்து விளங்கிய பதி திருமயிலை.
சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் மூன்று திருமுறைகளில் இத்தலம் போற்றப்படுகிறது.
இரண்டாம் திருமுறை:
இரண்டாம் திருமுறை 47வது பதிகம், பூம்பாவைப்பதிகம் எனப்படும். இப்பதிகம் ஞானசம்பந்தர் அருளிய திருமயிலைக்கு உரிய திருப்பதிகம் ஆகும்.
இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தின் சிறப்பை ஞானசம்பந்தப்பிள்ளையார் புகழ்ந்துள்ளார்.
7
இப்பதியின் இயற்கை வளத்தை,
''மட்டிட்ட புன்னை அம் கானல் மட மயிலை"(தேன் பொருந்திய புன்னை மரச்சோலைகள் சூழ்ந்த அழகிய கடற்கரை உடைய மயிலை) என்றும், "வண்மறுகில் மாமயிலை"(வளமான தெருக்களை உடைய மயிலை) என்றும், "ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலை"(அலைவீசும் கடலை உடைய மயிலை) என்றும்,"கார்தருசோலைசூழ்கபாலீச்சரம்"(மழைவளத்தால் மிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கோயில் உடைய மயிலை) என்றும் முதல் நான்கு பாடல்களில் சிறப்பிக்கிறார்.
மேலும்"மடலார்ந்த தெங்கின் மயிலையார்" (தென்னை மரங்கள். நிறைந்த மயிலை) என்று ஆறாவது பாடலிலும், "கண்ணார்மயிலை"(கண்களுக்கு விருந்தாகும் மயிலை) என்று எட்டாவது பாடலிலும், "கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்"என்று பத்தாவது பாடலிலும்"கானமர் சோலைக் கபாலீச்சரம்"என்று பதினொன்றாம் பாடலிலும் மயிலையின் நிலவளத்தையும் நீர்வளத்தையும் போற்றுகிறார்.
கபாலீச்சரம் திருக்கோயில் ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டு விளங்கியது.புரட்டாசி முதல் ஆவணி வரை நிகழ்ந்த விழாக்களையும் அவற்றின் சிறப்புக்களையும் பூம்பாவைப் பதிகத்தில் சம்பந்தர் பதிவிடுகிறார்.
புரட்டாசியில் மாகேசுவர பூசை, ஐப்பசியில் ஓண விழா, கார்த்திகை விளக்கீடு, மார்கழியில் திருவாதிரை, தைப்பூசம்,மாசிக்கடலாட்டு, பங்குனி உத்திரம், சித்திரை அட்டமி, வைகாசி ஊஞ்சல், ஆனி , ஆடி, ஆவணி மாதங்களில் பெருஞசாந்தி எனப்படும் பவித்ரோற்சவமும் கொண்டாடப்பட்டன.
இந்த விழாக்கள் எத்துணை சிறப்புடன் கொண்டாடப்பட்டன எனபதை"கலிவிழா"( ஆரவாரம்),"பலிவிழா"(அமுதுபடைத்தல்),"ஒலிவிழா" (பாடல்,ஆடல், முழவொலி) என்ற தொடர்களால் அறியமுடிகிறது.
மயிலையில் கோயில் விழாக்கள் மட்டுமே நடந்தனவா? இல்லை; மற்ற விழாக்களும் உண்டு. இதனை "மலிவிழா வீதி" என்ற தொடரால் அறியலாம்.வீதிகள்தோறும் விழாக்கள்-- இல்லங்கள்தோறும்,அம்பலங்கள்தோறும் நிறைந்து மலிந்து இருந்தன.
மேலும் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். இதனை சம்பந்தசுவாமிகள்குறிப்பால்உணர்த்துகிறார்.நீர்வளம், நிலவளம், செல்வம் நிறைந்து இருந்ததால்--"வண்மறுகில் மாமயிலை"-- வளம் மிக்க தெருக்களை உடைய மயிலையாக அவ்வூர் இருந்தது. வளம் நிறைந்திருந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் வெளிப்பாடாக மகளிர் தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்டனர். இதனை,
"மைப்பயந்த ஒண்கண் மடநல்லார்","மைப்பூசும் ஒண்கண் மடநல்லார்"என்றும், "வளைக்கை மடநல்லார்" என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்.
வளமை செல்வத்தில் மட்டுமன்றி கல்வியிலும் வீரத்திலும் விளங்கியது."கற்றார்கள் ஏத்தும கபாலீச்சரம் அமர்ந்தான்"என்ற தொடரால் கல்வி கேள்விகளில் மிக்க சான்றோர் அங்கு வாழ்ந்தனர் என்பது தெரிகிறது. அங்கிருந்த மீனவச்சேரியின் மீனவர்கள் வீரர்களாக, வேல்தொழிலில் வல்லவர்களாக விளங்கி, ஊரைக் காத்தனர்--"கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்" என்று அவர்கள் வீரத்தினைப் போற்றுகிறார்.
இவாவாறு சம்பந்தப் பெருமானால் இரண்டாம் திருமுறையில் மயிலையின் பெருமை உரைக்கப்பட்டுள்ளது.
ஏழாம் திருமுறை:
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் 'திருப்பாட்டு' ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
சுவாமிகள் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமது திருத்தொண்டத் தொகையில் வாயிலார் நாயனாரைப் போற்றும் பாடலில
" துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று பாடுகிறார்.
இதனால் மயிலை தொன்மைக் காலத்திலேயே சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியிருக்கிறது என்று அறியப்படுகிறது.
பதினொன்றாம் திருமுறை:
பதினொன்றாம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியில்" வீரார் மயிலை வாயிலாய்" என்று வாயிலார் நாயனாரைப் பாடுகையில் "வீரார் மயிலை" என்று மயிலையைச் சிறப்பிக்கிறார்.
பன்னிரண்டாம் திருமுறை:
இனி பன்னிரண்டாம் திருமுறையாம் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் மயிலையை. எவ்வாறு சிறப்பிக்கிறார் என்று காண்போம்.
'பூம்பாவைப் பதிகம்' பாடி, திருஞானசம்பந்தர் என்பைப் பெண்ணாக்கிய வரலாற்றைக் கூறும் முகத்தால், மயிலையின் சிறப்பைப் பேசுகிறார்.
"பன்னு தொல்புகழ் திரு மயிலாப்புரி"(பாடல் எண் 1033) இப்பதிவில் வாழ்ந்த சிவநேசர் என்பவர், கப்பல் வாணிகம் செய்தார் என அறியப்படுகிறது. மயிலை சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியது.
"அருநி தித்திறம் பெருக்குதற்
கருங்கலம் பலவும்
பொருக டற்செலப் போக்கியப்
பொருட்குவை நிரம்ப
வரும ரக்கல மனைப்படப்
பணைக்கரை நிரைக்கும்
இருநி திப்பெருஞ் செல்வத்தின்
எல்லையில் வளத்தார்."
"தம்மை யுள்ளவா றறிந்தபின்
சங்கரற் கடிமை
மெய்ம்மை யேசெயும் விருப்புடன்
மிக்கதோ ரன்பால்
பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது
எனக்கொளு முள்ளச்
செம்மை யேபுரி மனத்தினார்
சிவநேசர் என்பார்."
(பாடல் எண்கள் 1034& 1035).
இவருக்கு மகவு பிறந்த போது அந்நிகழ்வைக் கொண்டாடிய திறத்தை, இவ்வாறு கூறுகிறார்:
" நல்ல நாள்பெற ஓரையில்
நலம்மிக வுதிப்பப்
பல்பெ ருங்கிளை யுடன்பெரு
வணிகர்பார் முழுதும்
எல்லை யில்தன முகந்துகொண்
டியாவரும் உவப்ப
மல்ல லாவண மறுகிடைப்
பொழிந்துளம் மகிழ்ந்தார்."
(பாடல் எண் 1041)
ஆவண மறுகு - ஆவண வீதி
'ஆவண வீதி' என்பது வணிக வீதி-- பெருஞ்செல்வம் மிக்க பெருவணிகம் நிகழ்ந்த வீதி-- இந்நாளைய மும்பை ஜாவேரி பஜார் போல-- நியுயார்க் நகரின் வால்ஸ்டிரீட் போல.
சிவநேசர் திரு ஞான சம்பந்தர் திருவொற்றியூர் வந்தார் எனக் கேள்வியுற்றதும் அவரை திருமயிலைக்கு வரவேற்றார்.
‘மகர தோரணம் வண்குலைக்
கமுகொடு கதலி
நிகரில் பல்கொடித் தாமங்கள்
அணிபெற நிரைத்து
நகர நீள்மறுகு யாவையும்
நலம்புனை அணியால்
புகரில் பொன்னுல கிழிந்ததாம்
எனப்பொலி வித்தார்.*
'நகர நீள்மறுகு' என்ற தொடரினால் மயிலை நகரில் நீண்ட தெருக்கள விளங்கின என அறியப்படுகிறது.
'என்பு நிறைந்த கலசத்தைக் கொணர்க' என ஞானசம்பந்தர் உரைக்க, அதனைத் திருக்கோயில் அருகே கொணர்ந்தார். அவ்வரிய நிகழ்ச்சியைக் காண மாந்தர் சூழ்ந்து வந்ததை
"மாடம் ஓங்கிய மயிலைமா
நகருளார் மற்றும்
நாடு வாழ்பவர் நன்றியில்
சமயத்தி னுள்ளோர்
மாடு சூழ்ந்துகாண் பதற்குவந்
தெய்தியே மலிய"
என்கிறார்.இவ்வாற்றான் பெரிய புராணத்தின்கண் சம்பந்தப்பிள்ளையார் வரலாற்றின் வாயிலாக 7ம் நூற்றாண்டிலேயே , திருமயிலை நீர்வளம் நிலவளம் ஓங்கி செல்வச் செழிப்பு மிக்க வணிக நகரமாகவும், துறைமுகப்பட்டினமாகவும் , கல்வி கலைகளிலும் சிறந்து விளங்கிய நகரமாகவும் திகழ்ந்ததை அறியலாம். மயிலை நகர மக்கள் எல்லா நலன்களும் பெற்று நாள்தோறும் ஒரு விழாப் பொலிய வாழ்ந்தனர் என்றும் அறியப்படுகிறது.
பன்னிரண்டாம் திருமுறை--வாயிலார் நாயனார் புராணம்:
இப்புராணத்துள்ளும் திருமயிலை யின் செல்வச்செழிப்பை ஐந்து பாடல்களில் சேக்கிழார் எடுத்துரைக்கிறார்.
"செல்வம் மல்கு திருமயிலாப்புரி" என்று முதல் பாடலில் குறிப்பிடுகிறார்.
கடல தன்னிடம் உள்ள செல்வங்களைச் சேமித்து வைக்கும் சேம வைப்பு நிதி யாக இந்நகரின் மாளிகைகள் விளங்கின என்பதை
* நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்
தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.*
என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.
பொன்னும் மணியும் பிற செல்வங்களும் மரக்கலங்களில் வந்து இறங்கின.அவை பெரும் மாளிகைகளில் சேமித்து வைக்கப்பட்டன.
முத்துக்களை வாரி இறைக்கும் கடலின் கண் மரக்கலங்களில் வந்து இறங்கிய பொருட்கள் யாவும் கடற்கரையின்கண் செறிந்து விளங்கின.
இந்நகரின் வெண்சுண்ணம் பூசிய மாடங்களின் இறப்புக்களில் பறக்கும் கொடிகளின் இடையே நிலவு தவழ்ந்து செல்லும். அத்துணை உயரமான மாளிகைகள்.
"தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி" என்கிறார்.
செல்வச் செழிப்பினால் எப்போதும் விழாக்கோலம் பூண்டு இலங்கியது இந்நகர். பெண்கள் புதுமலர் சூடிப் பொலிவுடன் விளங்கினர்.
சுண்ணம் பூசிய ஒளிமிக்க மாடமாளிகைகள் எங்கும் நிதிகளும் அணிமணிகளும் நிறைந்து விளங்கின.கன்னியரும் காளையரும் களிப்புடன் விளங்கினர்.இதனை
"வீதியெங்கும் விழாவணி காளையர்
தூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்
ஓதி யெங்கும் ஒழியா அணிநிதி
பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்."
என்று குறிப்பிடுகிறார்.
செல்வத்தில் மட்டுமா சிறந்தது இப்பதி?
தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து அன்றோ? வாய்மையாலும், தொல்குடிப்பெருமையாலும் புகழ்பெற்ற சான்றோர் இங்கு வாழ்கின்றனர்.சான்றோர் என்ற பெருஞ்செல்வம் பெற்ற பதி இது.
"சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை
மல்லல் நீடிய வாய்மை வளம்பதி
பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்
செல்வம் மல்கு திருமயி லாபுரி."
என் இப்புராணத்தின் முதல் பாடலிலேயே மயிலைவாழ் சான்றோர் பெருமையைப் பேசுகிறார் சேக்கிழார்.
இன்னும் ஆறாம் திருமுறையின்கண அப்பர் பெருமான் தம் திருவொற்றியூர் பதிகத்தில்(6.45.6)"மயிலாப்பு" என்று இப்பதியைக் குற்ப்பிடுகிறார்.
இவ்வாறு சைவத் திருமுறைகளில் சிறப்பாகப் பேசப்பட்டுள்ள மயிலாப்பூர் மிகப்பழங்காலத்திலேயே , ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளிலேயே ஒரு பெருநகரமாகவும் துறைமுகமாகவும் வணிகத்தலமாகவும் கல்வியிற்சிறந்த
சான்றோர் வாழ்ந்த நகரமாகவும் விளங்கியது என்பது தெளிவு.
No comments:
Post a Comment