Thursday, 7 June 2018

உண்ட பெருக்கம்

தமிழ்ப் புலவர் ஔவையார் ஒரு மதிய வேளையில் வயல் வரப்பு வழியாக வந்துகொண்டிருந்தார்.
பூதன் என்பவனது வயல் அது.
அவன் மனைவி அப்போதுதான் அவனுக்கு மதிய உணவு கொண்டு வந்திருந்தாள்.அவள்பூதனிடம் "அவ்வைப்பாட்டி வருகிறார் பார். அவரை உணவு உண்ணச் சொல்வோம்" என்றாள்.
அதற்கு அவன்"அவர் ராசா வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் வருகிறார் அழைப்பு வந்தது என்று நேற்று என்னிடம் சொன்னார்" என்றான்.அதற்குள் பாட்டி அருகில் வந்துவிட்டார். பாட்டியின் முகத்தில்  வழக்கமான உற்சாகத்தைக் காணாத பூதன் "என்ன பாட்டி‌! ராசா வீட்டில் விருந்து பலமா? உண்டீரா? களைப்பாக இருக்கிறதா?" என்று வினவினான்.
"உண்டேன் உண்டேன்" என்றார் சோர்வுடன். உண்ணவில்லை என்பதையும் எதிர்மறையின்றி உண்டேன் உண்டேன் என்று பாட்டாலே பகர்ந்தார் இப்படி

வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியாலே
சுருக்குண்டேன், சோறு(உ)ண்டி லேன்

இதைக்கேட்ட பூதன் பரிவுடன்
"அம்மையே இந்த உணவை தயைகூர்ந்து உண்ணுங்கள்"என்று தன்னிடம் இருந்த உணவை அளித்தான். அவர் மனம் குளிர்ந்து அவனைப் பாராட்டினார் பாட்டாலேதான் இப்படி

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்

அரசன் கல்யாண விருந்தில் கூட்டத்தால் நெருக்குண்ள்ளுடு தள்ளுண்டு சாப்பிட முடியாமல் பசியுடன் வந்தவருக்கு பூதன்அளித்த எளிய உணவான  வரகரிசிச்சோறும்‌ சுட்டகத்தரிக்காயும் புளித்த மோரும் ( முரமுரெனவே புளித்த மோர்- மிகவும் புளித்த மோர் அருகில் காதை வைத்து பார்த்தால் சத்தம் கேட்கும்) அமுதமாகவே இருந்தது.
அதற்கு ஈடாக எல்லா உலகையும் அளிக்கலாம் என்றார்.
இப்படிப்பட்ட அவலம் கல்யாண வீடுகளில் நானும் அனுபவித்து இருக்கிறேன்.ஆனால் இப்போதெல்லாம் உபசரிப்பை சீருடை அணிந்த கேட்டரிங் பெண்கள் கவனித்துக் கொள்கிறார்கள். எனவே சாப்பிடுவதற்கு அதிகம் மெனக்கெடவேண்டியதில்லை!

No comments:

Post a Comment