" நல்ல " விஷயம்
என் நண்பர் பகல் பன்னிரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தார் . அவரை அமரச்செயது தண்ணீர் கொடுத்த நான் கேட்ட முதல் கேள்வி "என்ன இது நல்ல வெய்யிலில் கிளம்பினீர்கள்?" என்பதுதான்."என்னம்மா செய்வது ?
காலையில் கிளம்பினேன், பல வேலைகளை முடிக்கவேண்டியிருந்தது " என்றார்
பிறகு பேசிக்கொண்டிருக்கையில் அவரது மற்றொரு நண்பரின் மகளுக்கு திருமணம் செய்ய பார்த்துக்கொண்டிருப்பதாகவும் , நல்ல வரன் தெரிந்தால் சொல்லுமாறும் கூறினார். நானும் நல்ல பையனாக நல்ல வேலை நல்ல சம்பளத்தில் இருப்பவன் காதில் பட்டால் சொல்கிறேன் என்றேன்.
சென்ற பெருமழையின்போது அவரது வீடு சேதமடைந்தது, அதைப்பற்றி பேசுகையில் தான் அப்போது வெளியில் சென்று நல்ல மழையிலும் வெள்ளத்திலும் மாட்டிக்கொண்டதை நினைவுகூர்ந்தார். அதன்பிறகு அவருக்கு ஜுரம் வந்தது. அதுவும் நல்ல ஜுரம்!
முதல் பாராவிலும் மூன்றாவது பராவிலும் உள்ள நல்ல வற்றுக்கெல்லாம் அதற்கு நேர் எதிரான பொருள் என்பதை யாவரும் அறிவீர்கள்.இரண்டாவது பாராவில் நான்கு நல்ல உள்ளன. அவற்றில் முதல் மூன்றுக்கும் உயர்ந்த என்ற பொருளும் நான்காவதற்கு மிகுந்த , நிறைய என்ற பொருளும் உள்ளன.
இன்னும் பலவற்றுக்கு நல்ல அடைமொழி கொடுக்கப்படுகிறது . "நல்ல" பாம்பு எதில் நல்லது? விஷத்திலா?
நாம் சமையலில் பயன்படுத்தும் மிளகை நாகர்கோயில் தமிழர்கள் நல்ல மிளகு என்கிறாரகள். மிளகாயை மிளகு என்று அடைமொழியின்றி குறிப்பிடுகிறாரகள். மிளகின் மருத்துவ குணம் பற்றி அதற்கு நல்ல பெயர் கொடுத்தார்கள் போலும்!
இறைவன் நமது உள்ளத்தில் குடியிருநதால் எல்லாமே நல்லவைதாம் என்று
தமிழ் விரகர் ஞானசம்பந்தர் தமது கோளறு பதிகத்தில் சொல்கிறாரார். ஒவ்வொரு பாடலிலும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல என்று நான்கு நான்கு முறை அறுதியிட்டுக்கூறுகிறார். பல இடங்களில் தமது பாடல்களில் நல்ல என்ற சொல்லை பயன்படுத்துகிறார். நல்ல என்ற சொல் மங்கலத்தைக்குறிக்கும் . பல நேரங்களில் உரையாடல்களில் " சரி " என்பதற்கு பதில் "நல்லது" என்ற சொல்லை பெரியோர் பயன்படுத்துவதைக் கேட்டிருக்கலாம்.
நல்லது , நான் விடைபெறுகிறேன் . அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழ வாழ்த்துகிறேன்
No comments:
Post a Comment