Tuesday, 2 August 2016

சென்னை டப்பாவாலாக்கள் பற்றி                                   

டப்பாவாலாக்கள் மும்பைக்கு உரியவர்கள்தாம். ஆனால் சென்னையிலும் அதுபோன்ற  ஒரு அமைப்பு உண்டு. 1950/60களில். அப்போதெல்லாம் பெரும்பாலான அரசு மற்றும் தனியார்
அலுவலகங்கள் வட சென்னையின் இதயப்பகுதியான ஜாரஜ்டவுன் (இப்போதைய பாரீஸ் பகுதி) பகுதியில் இயங்கி வந்தன. இந்த அலுவலகங்களில் வேலை பார்த்த பெரும்பாலோர் நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பினர். இவர்கள் தென்சென்னைப் பகுதிகளில்  வசித்துவந்தார்கள் .காலை உணவுக்குப்பின் அலுவலகம் சென்றுவிடுவர் .பெரும்பாலும் மின்சார ரயிலில் பயணிப்பர் .இவர்களது மதிய  உணவைக்கொண்டு செல்பவர்களைப் பற்றித்தான்  இப்போது கூற வந்தேன் 
மகன் அல்லது கணவன் அலுவலகம் சென்றபின் பெண்கள் சமயலைதொடங்குவர் .சாதம் குழம்பு ,காய், கூட்டு, தயிர் ,ஊறுகாய்  என தனித்தனியாக டிபன் கேரியரில் வைப்பதற்கும்  வாசல் கதவு தட்டப்படுவதற்கும் சரியாக இருக்கும் . வருபவர்தான் நமது கதாநாயகர் இவர்  அல்லது இவள் ஒரு பெரிய கூடையை தலையில் சுமந்து வருவார். இதில்  எல்லா வீடுகளிலிருந்தும் பெறப்பட்ட டிபன் கேரியர்கள் இருக்கும் .அவற்றுடன் ரயில் அல்லது பேருந்து மூலம் ஒவ்வோர் அலுவலகமாகச்செல்வர் .பெரிய அலுவலகங்களில் இவர்கள் வருவதற்கென்று  தனி வழி இருக்கும். ஒவ்வொரு பயனாளருக்கும் கேரியர் வைப்பதற்கென்று ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் .ஒரு எண் அல்லது குறியீடு இருக்கும் . அந்த இடத்தில் வைத்துவிட்டு அடுத்த அலுவலகம்  செல்வர் . எல்லோரும் சாப்பிட்டு முடிந்தாயின் மீண்டும் ஒவ்வொரு அலுவலகமாகச்சென்று  காலி கேரியர்களை பெற்றுக்கொள்வர் .
காலி  என்று சொன்னாலும் அது உண்மையில் காலி அன்று..எல்லாவற்றிலும்  கொஞ்சமாவது சாப்பாடு  மிச்சமிருக்கும் .கூடைக்காரராகள் எல்லா  வீட்டு சாப்பாட்டையும் ஒன்றாகக்கலந்து கதம்பமாக செய்வர். மிகவும் ஏழைகளாக உள்ள கூலிகள்  வண்டி இழுப்போர்  போன்றவர்களுக்கு  குறைந்த விலையில் விற்றுவிடுவர் .
சாப்பாடு  எச்சில் என்று நினைக்கிறீர்களா? இல்லை .அவர்கள் சாப்பாட்டை டிபன் கேரியரிலிருந்து சாப்பிடாமல் வேறு ஓரு  தட்டிலோ அல்லது இலையிலோ போட்டுக்கொண்டு சாப்பிடுவர் . எனவே மீதம் உள்ள  உணவை ஏழைகள்  சாப்பிடலாம் .இதற்காகவே  வீட்டுப்பெண்கள்  அதிகமாகவே உணவை கொடுப்பர் . இதனால் கூடைக்காரர்களுக்கும் சிறிது அதிக  வருமானம்  கிடைக்கும் . 
திரும்பவும்  மாலையில் ஒவ்வொரு வீடாக சென்று கேரியர்களை ஒப்படைப்பர் .
இதிலும் வீட்டுப்பெண்கள் முணுமுணுப்பது உண்டு. ஏனெனில்  இந்த கூடைக்காரன்  ஆண்கள் அலுவலகம் சென்ற உடனேயே வந்துவிடுகிறான் . அவசரமாக  சமைக்கவேண்டியிருக்கிறது என்பதுதான் அவர்களது வருத்தம் .
மும்பை  டப்பாவாலாக்களுக்கும் இவர்களுக்கும் உள்ள  முக்கிய வேறுபாடு இவர்கள் பல கைகள் மாற்றுவதில்லை .வீட்டில்  பெற்றுக்கொள்பவர்களே  அலுவலகத்திற்கும் செல்கிறாரகள் .
மாலையில்  வீட்டுப்பெண்களிடம்  மனம் திறக்கிறார்கள் . "அம்மா  இன்னைக்கு  அய்யா  சரியா  சாப்பிடலைங்கம்மா .சாப்பாடு பூரா  மிச்சம்  வெச்சுட்டார் " என்பன போன்ற அங்கலாய்ப்புகள் இருக்கும் .

இந்த நாட்களில் இவர்களுக்கான தேவை  இல்லை. அலுவலகம் செல்வோர்  தங்களுக்கான  உணவை  தாங்களே  சிறிய கைப்பைகளில்  எடுத்துச்செல்கிறாரகள் ; அல்லது அலுவலகத்தில்  உள்ள  உணவகங்களில்  உண்கிறார்கள் .எனவே சாப்பாட்டுக்  கூடைக்காரர்கள்  சென்னையைப்  பொறுத்தவரை  பழங்கதை  ஆகிவிட்டார்கள்.

No comments:

Post a Comment