Tuesday 14 December 2021

cintanai: திருமுறையில் திருமயிலை

cintanai: திருமுறையில் திருமயிலை:        மிகவும் அழகு வாய்ந்ததும், புண்ணியமும் திருவும் நிறைந்துமாகிய"திருமயிலை" என்கிற. மயிலாப்பூர், இந்நாளில் சென்னை நகரின் ஒரு பக...

Sunday 12 December 2021

திருமுறையில் திருமயிலை

 


     மிகவும் அழகு வாய்ந்ததும், புண்ணியமும் திருவும் நிறைந்துமாகிய"திருமயிலை" என்கிற. மயிலாப்பூர், இந்நாளில் சென்னை நகரின் ஒரு பகுதியாக விளங்குகிறது.

     தேரோடும் மாடவீதிகளும், தெப்பக் குளங்களும் , வணிக நிறுவனங்களும், உணவுச் சாலைகளும், காய், கனி,மலர் அங்காடிகளும், கல்வி நிலையங்களும், அனைத்து சமய ஆலயங்களும் நெருங்கி அமையப்பெற்ற திருமயிலை இப்போது உள்ளதைப் போலவே மிகவும் பழங்காலத்திலும் சிறப்பும் பொலிவும் பெற்று விளங்கியது.

     சென்னை நகரின் வயது, ஃபிரான்ஸிஸ் டே அதனை விலை கொடுத்து வாங்கிய காலத்தைக் கணக்கிட்டு 363 வருடங்கள் என்று கூறப்படுகிறது.

     திரு. கே.ஆர்.ஏ. நரசய்யா தமது "மதராசபட்டினம்" என்னும் வரலாற்று நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

     1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22 ம் தேதி தாமல் வெங்கடாத்ரி என்பவர், கிழக்கிந்திய கம்பெனியின் ஏஜண்டான ஃபிரானசிஸ் டே என்பவருக்கு மதராச பட்டினத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொள்ளவும் வாணிகம் செய்யவும் ஒரு ஒப்பந்தம் செய்தளித்தார்.

     அப்போது அது ஒரு சிறு மீன்பிடி கிராமமாக இருந்தது என்று கூறப்படுகிறது.

     ஆனால், சென்னையின் ஒரு பகுதியாகிய மயிலாப்பூர் 7ம் நூற்றாண்டிலேயே, சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியிருக்கிறது.

     சங்கம் மருவிய காலத்து (சிலப்பதிகாரம்) பூம்புகார் போன்றே வணிகமும் செல்வமும் செழித்து விளங்கிய பதி திருமயிலை.

     சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் மூன்று திருமுறைகளில் இத்தலம் போற்றப்படுகிறது.

     இரண்டாம் திருமுறை:

     இரண்டாம் திருமுறை 47வது பதிகம், பூம்பாவைப்பதிகம் எனப்படும். இப்பதிகம் ஞானசம்பந்தர் அருளிய திருமயிலைக்கு உரிய திருப்பதிகம் ஆகும்.

     இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இத்தலத்தின் சிறப்பை ஞானசம்பந்தப்பிள்ளையார் புகழ்ந்துள்ளார்.

     7

     இப்பதியின் இயற்கை வளத்தை,

     ''மட்டிட்ட புன்னை அம் கானல் ‌மட மயிலை"(தேன் பொருந்திய புன்னை மரச்சோலைகள் சூழ்ந்த அழகிய கடற்கரை உடைய மயிலை) என்றும், "வண்மறுகில் மாமயிலை"(வளமான தெருக்களை உடைய மயிலை) என்றும், "ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலை"(அலைவீசும் கடலை உடைய மயிலை) என்றும்,"கார்தருசோலைசூழ்கபாலீச்சரம்"(மழைவளத்தால் மிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கோயில் உடைய மயிலை) என்றும் முதல் நான்கு பாடல்களில் சிறப்பிக்கிறார்.

     மேலும்"மடலார்ந்த தெங்கின் மயிலையார்" (தென்னை மரங்கள். நிறைந்த மயிலை) என்று ஆறாவது பாடலிலும், "கண்ணார்மயிலை"(கண்களுக்கு விருந்தாகும் மயிலை) என்று எட்டாவது‌ பாடலிலும், "கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரம்"என்று பத்தாவது பாடலிலும்"கானமர் சோலைக் கபாலீச்சரம்"என்று பதினொன்றாம் ‌பாடலிலும் மயிலையின் நிலவளத்தையும் நீர்வளத்தையும் போற்றுகிறார்.

     கபாலீச்சரம் திருக்கோயில் ஆண்டு முழுவதும் விழாக்கோலம் பூண்டு விளங்கியது.புரட்டாசி முதல் ஆவணி வரை நிகழ்ந்த விழாக்களையும் அவற்றின் சிறப்புக்களையும் பூம்பாவைப் பதிகத்தில் சம்பந்தர் பதிவிடுகிறார்.

     புரட்டாசியில் மாகேசுவர பூசை, ஐப்பசியில் ஓண விழா, கார்த்திகை விளக்கீடு, மார்கழியில் திருவாதிரை, தைப்பூசம்,மாசிக்கடலாட்டு, பங்குனி உத்திரம், சித்திரை அட்டமி, வைகாசி ஊஞ்சல், ஆனி , ஆடி, ஆவணி மாதங்களில் பெருஞசாந்தி எனப்படும் பவித்ரோற்சவமும் கொண்டாடப்பட்டன.

     இந்த விழாக்கள் எத்துணை சிறப்புடன் கொண்டாடப்பட்டன எனபதை"கலிவிழா"( ஆரவாரம்),"பலிவிழா"(அமுதுபடைத்தல்),"ஒலிவிழா" (பாடல்,ஆடல், முழவொலி) என்ற தொடர்களால் அறியமுடிகிறது.

     மயிலையில் கோயில் விழாக்கள் மட்டுமே நடந்தனவா? இல்லை; மற்ற விழாக்களும் உண்டு. இதனை "மலிவிழா வீதி" என்ற தொடரால் அறியலாம்.வீதிகள்தோறும் விழாக்கள்-- இல்லங்கள்தோறும்,அம்பலங்கள்தோறும் நிறைந்து மலிந்து இருந்தன.

     மேலும் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். இதனை சம்பந்தசுவாமிகள்குறிப்பால்உணர்த்துகிறார்.நீர்வளம், நிலவளம், செல்வம் நிறைந்து இருந்ததால்--"வண்மறுகில் மாமயிலை"-- வளம் மிக்க தெருக்களை உடைய மயிலையாக அவ்வூர் இருந்தது. வளம் நிறைந்திருந்ததால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் வெளிப்பாடாக மகளிர் தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்டனர். இதனை,

     "மைப்பயந்த ஒண்கண் மடநல்லார்","மைப்பூசும் ஒண்கண் மடநல்லார்"என்றும், "வளைக்கை மடநல்லார்" என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்.

     வளமை செல்வத்தில் மட்டுமன்றி கல்வியிலும் வீரத்திலும் விளங்கியது."கற்றார்கள் ஏத்தும கபாலீச்சரம் அமர்ந்தான்"என்ற தொடரால் கல்வி கேள்விகளில் மிக்க சான்றோர் அங்கு வாழ்ந்தனர் என்பது தெரிகிறது. அங்கிருந்த மீனவச்சேரியின் மீனவர்கள் வீரர்களாக, வேல்தொழிலில் வல்லவர்களாக விளங்கி, ஊரைக் காத்தனர்--"கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில் கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்" என்று அவர்கள் வீரத்தினைப் போற்றுகிறார்.

     இவாவாறு சம்பந்தப் பெருமானால் இரண்டாம் திருமுறையில் மயிலையின் பெருமை உரைக்கப்பட்டுள்ளது.

     ஏழாம் திருமுறை:

     சுந்தரமூர்த்தி சுவாமிகளின் 'திருப்பாட்டு' ஏழாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

     சுவாமிகள் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் தமது திருத்தொண்டத் தொகையில் வாயிலார் நாயனாரைப் போற்றும் பாடலில

   " துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்

தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்" என்று பாடுகிறார்.

இதனால் மயிலை தொன்மைக் காலத்திலேயே சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியிருக்கிறது என்று அறியப்படுகிறது.

பதினொன்றாம் திருமுறை:

பதினொன்றாம் திருமுறையில் நம்பியாண்டார் நம்பி தம் திருத்தொண்டர் திருவந்தாதியில்" வீரார் மயிலை வாயிலாய்" என்று வாயிலார் நாயனாரைப் பாடுகையில் "வீரார் மயிலை" என்று மயிலையைச் சிறப்பிக்கிறார்.

பன்னிரண்டாம் திருமுறை:

இனி பன்னிரண்டாம் திருமுறையாம் பெரிய புராணத்தில் தெய்வச் சேக்கிழார் மயிலையை. எவ்வாறு சிறப்பிக்கிறார் என்று காண்போம்.

'பூம்பாவைப் பதிகம்' பாடி, திருஞானசம்பந்தர் என்பைப் பெண்ணாக்கிய வரலாற்றைக் கூறும் முகத்தால், மயிலையின் சிறப்பைப் பேசுகிறார்.

"பன்னு தொல்புகழ் திரு மயிலாப்புரி"(பாடல் எண் 1033) இப்பதிவில் வாழ்ந்த சிவநேசர் என்பவர், கப்பல் வாணிகம் செய்தார் என அறியப்படுகிறது. மயிலை சிறந்த துறைமுகப்பட்டினமாக விளங்கியது.


"அருநி தித்திறம் பெருக்குதற்

கருங்கலம் பலவும்

பொருக டற்செலப் போக்கியப்

பொருட்குவை நிரம்ப

வரும ரக்கல மனைப்படப்

பணைக்கரை நிரைக்கும்

இருநி திப்பெருஞ் செல்வத்தின்

எல்லையில் வளத்தார்."


"தம்மை யுள்ளவா றறிந்தபின்

சங்கரற் கடிமை

மெய்ம்மை யேசெயும் விருப்புடன்

மிக்கதோ ரன்பால்

பொய்மை நீக்கியமெய்ப் பொருளிது

எனக்கொளு முள்ளச்

செம்மை யேபுரி மனத்தினார்

சிவநேசர் என்பார்."


(பாடல் எண்கள் 1034& 1035).

 இவருக்கு மகவு பிறந்த போது அந்நிகழ்வைக் கொண்டாடிய திறத்தை, இவ்வாறு கூறுகிறார்:

  

" நல்ல நாள்பெற ஓரையில்

நலம்மிக வுதிப்பப்

பல்பெ ருங்கிளை யுடன்பெரு

வணிகர்பார் முழுதும்

எல்லை யில்தன முகந்துகொண்

டியாவரும் உவப்ப

மல்ல லாவண மறுகிடைப்

பொழிந்துளம் மகிழ்ந்தார்."

 (பாடல் எண் 1041)

ஆவண மறுகு - ஆவண வீதி

'ஆவண வீதி' என்பது வணிக வீதி-- பெருஞ்செல்வம் மிக்க பெருவணிகம் நிகழ்ந்த வீதி-- இந்நாளைய மும்பை ஜாவேரி பஜார் போல-- நியுயார்க் நகரின் வால்ஸ்டிரீட் போல.

சிவநேசர் திரு ஞான சம்பந்தர் திருவொற்றியூர் வந்தார் எனக் கேள்வியுற்றதும் அவரை திருமயிலைக்கு வரவேற்றார்.

     ‘மகர தோரணம் வண்குலைக்

கமுகொடு கதலி

நிகரில் பல்கொடித் தாமங்கள்

அணிபெற நிரைத்து

நகர நீள்மறுகு யாவையும்

நலம்புனை அணியால்

புகரில் பொன்னுல கிழிந்ததாம்

எனப்பொலி வித்தார்.*

'நகர நீள்மறுகு' என்ற தொடரினால் மயிலை நகரில் நீண்ட தெருக்கள விளங்கின என அறியப்படுகிறது.

'என்பு நிறைந்த கலசத்தைக் கொணர்க' என ஞானசம்பந்தர் உரைக்க, அதனைத் திருக்கோயில் அருகே கொணர்ந்தார். அவ்வரிய நிகழ்ச்சியைக் காண மாந்தர் சூழ்ந்து வந்ததை


"மாடம் ஓங்கிய மயிலைமா

நகருளார் மற்றும்

நாடு வாழ்பவர் நன்றியில்

சமயத்தி னுள்ளோர்

மாடு சூழ்ந்துகாண் பதற்குவந்

தெய்தியே மலிய"

என்கிறார்.இவ்வாற்றான் பெரிய புராணத்தின்கண் சம்பந்தப்பிள்ளையார் வரலாற்றின் வாயிலாக 7ம் நூற்றாண்டிலேயே , திருமயிலை நீர்வளம் நிலவளம் ஓங்கி செல்வச் செழிப்பு மிக்க வணிக நகரமாகவும், துறைமுகப்பட்டினமாகவும் , கல்வி கலைகளிலும் சிறந்து விளங்கிய நகரமாகவும் திகழ்ந்ததை அறியலாம். மயிலை நகர மக்கள் எல்லா நலன்களும் பெற்று நாள்தோறும் ஒரு விழாப் பொலிய வாழ்ந்தனர் என்றும் அறியப்படுகிறது.


பன்னிரண்டாம் திருமுறை--வாயிலார் நாயனார் புராணம்:

இப்புராணத்துள்ளும் திருமயிலை யின் செல்வச்செழிப்பை ஐந்து பாடல்களில் சேக்கிழார் எடுத்துரைக்கிறார்.

"செல்வம் மல்கு திருமயிலாப்புரி" என்று முதல் பாடலில் குறிப்பிடுகிறார்.

கடல தன்னிடம் உள்ள செல்வங்களைச் சேமித்து வைக்கும் சேம வைப்பு நிதி யாக இந்நகரின் மாளிகைகள் விளங்கின என்பதை

* நீடு வேலைதன் பால்நிதி வைத்திடத்

தேடும் அப்பெருஞ் சேமவைப் பாமென

ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி

மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.*

என்ற பாடலில் குறிப்பிடுகிறார்.

பொன்னும் மணியும் பிற செல்வங்களும் மரக்கலங்களில் வந்து இறங்கின.அவை பெரும் மாளிகைகளில் சேமித்து வைக்கப்பட்டன.

முத்துக்களை வாரி இறைக்கும் கடலின் கண் மரக்கலங்களில் வந்து இறங்கிய பொருட்கள் யாவும் கடற்கரையின்கண் செறிந்து விளங்கின.

இந்நகரின் வெண்சுண்ணம் பூசிய மாடங்களின் இறப்புக்களில் பறக்கும் கொடிகளின் இடையே நிலவு தவழ்ந்து செல்லும். அத்துணை உயரமான மாளிகைகள்.

"தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்

துவள்ப தாகை நுழைந்துஅணை தூமதி" என்கிறார்.

செல்வச் செழிப்பினால் எப்போதும் விழாக்கோலம் பூண்டு இலங்கியது இந்நகர். பெண்கள் புதுமலர் சூடிப் பொலிவுடன் விளங்கினர்.

சுண்ணம் பூசிய ஒளிமிக்க மாடமாளிகைகள் எங்கும் நிதிகளும் அணிமணிகளும் நிறைந்து விளங்கின.கன்னியரும் காளையரும் களிப்புடன் விளங்கினர்.இதனை


"வீதியெங்கும் விழாவணி காளையர்

தூதுஇ யங்குஞ் சுரும்பணி தோகையர்

ஓதி யெங்கும் ஒழியா அணிநிதி

பூதி யெங்கும் புனைமணி மாடங்கள்."

என்று குறிப்பிடுகிறார்.


செல்வத்தில் மட்டுமா சிறந்தது இப்பதி?

தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து அன்றோ? வாய்மையாலும், தொல்குடிப்பெருமையாலும் புகழ்பெற்ற சான்றோர் இங்கு வாழ்கின்றனர்.சான்றோர் என்ற பெருஞ்செல்வம் பெற்ற பதி இது.

"சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை

மல்லல் நீடிய வாய்மை வளம்பதி

பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச்

செல்வம் மல்கு திருமயி லாபுரி."

என் இப்புராணத்தின் முதல் பாடலிலேயே மயிலைவாழ் சான்றோர் பெருமையைப் பேசுகிறார் சேக்கிழார்.

இன்னும் ஆறாம் திருமுறையின்கண அப்பர் பெருமான் தம் திருவொற்றியூர் பதிகத்தில்(6.45.6)"மயிலாப்பு" என்று இப்பதியைக் குற்ப்பிடுகிறார்.

இவ்வாறு சைவத் திருமுறைகளில் சிறப்பாகப் பேசப்பட்டுள்ள மயிலாப்பூர் மிகப்பழங்காலத்திலேயே , ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளிலேயே ஒரு பெருநகரமாகவும் துறைமுகமாகவும் வணிகத்தலமாகவும் கல்வியிற்சிறந்த

சான்றோர் வாழ்ந்த நகரமாகவும் விளங்கியது என்பது தெளிவு.


Thursday 7 June 2018

உண்ட பெருக்கம்

தமிழ்ப் புலவர் ஔவையார் ஒரு மதிய வேளையில் வயல் வரப்பு வழியாக வந்துகொண்டிருந்தார்.
பூதன் என்பவனது வயல் அது.
அவன் மனைவி அப்போதுதான் அவனுக்கு மதிய உணவு கொண்டு வந்திருந்தாள்.அவள்பூதனிடம் "அவ்வைப்பாட்டி வருகிறார் பார். அவரை உணவு உண்ணச் சொல்வோம்" என்றாள்.
அதற்கு அவன்"அவர் ராசா வீட்டுக் கல்யாணத்திற்குப் போய் வருகிறார் அழைப்பு வந்தது என்று நேற்று என்னிடம் சொன்னார்" என்றான்.அதற்குள் பாட்டி அருகில் வந்துவிட்டார். பாட்டியின் முகத்தில்  வழக்கமான உற்சாகத்தைக் காணாத பூதன் "என்ன பாட்டி‌! ராசா வீட்டில் விருந்து பலமா? உண்டீரா? களைப்பாக இருக்கிறதா?" என்று வினவினான்.
"உண்டேன் உண்டேன்" என்றார் சோர்வுடன். உண்ணவில்லை என்பதையும் எதிர்மறையின்றி உண்டேன் உண்டேன் என்று பாட்டாலே பகர்ந்தார் இப்படி

வண்தமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
உண்ட பெருக்கம் உரைக்கக் கேள் – அண்டி
நெருக்குண்டேன், தள்ளுண்டேன், நீள்பசியாலே
சுருக்குண்டேன், சோறு(உ)ண்டி லேன்

இதைக்கேட்ட பூதன் பரிவுடன்
"அம்மையே இந்த உணவை தயைகூர்ந்து உண்ணுங்கள்"என்று தன்னிடம் இருந்த உணவை அளித்தான். அவர் மனம் குளிர்ந்து அவனைப் பாராட்டினார் பாட்டாலேதான் இப்படி

வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்
முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
புல்வேளூர்ப் பூதன் புகழ்ந்து பரிந்திட்டசோ(று)
எல்லா உலகும் பெறும்

அரசன் கல்யாண விருந்தில் கூட்டத்தால் நெருக்குண்ள்ளுடு தள்ளுண்டு சாப்பிட முடியாமல் பசியுடன் வந்தவருக்கு பூதன்அளித்த எளிய உணவான  வரகரிசிச்சோறும்‌ சுட்டகத்தரிக்காயும் புளித்த மோரும் ( முரமுரெனவே புளித்த மோர்- மிகவும் புளித்த மோர் அருகில் காதை வைத்து பார்த்தால் சத்தம் கேட்கும்) அமுதமாகவே இருந்தது.
அதற்கு ஈடாக எல்லா உலகையும் அளிக்கலாம் என்றார்.
இப்படிப்பட்ட அவலம் கல்யாண வீடுகளில் நானும் அனுபவித்து இருக்கிறேன்.ஆனால் இப்போதெல்லாம் உபசரிப்பை சீருடை அணிந்த கேட்டரிங் பெண்கள் கவனித்துக் கொள்கிறார்கள். எனவே சாப்பிடுவதற்கு அதிகம் மெனக்கெடவேண்டியதில்லை!

Monday 4 December 2017

Translation Hazards

Learning a language through its literature and other works at school or university may not lead to the mastery of the language. Same words may have different significance  and different meanings according to the contexts. This I realised through a funny experience.
  My husband while in service used to travel a lot by road. Because of this, once he developed a stiffness of the neck and was not relieved even after taking medicines.While he was on tour at Coimbatore, one of his friends suggested an Ayurvedic preparation available there which was a proven remedy.My husband bought it and brought it home.
  I used to see, read through literature and make a thorough examination (I boast myself of my half baked knowledge) whenever a family member is taking a new medicine. This time no literature was available. The bottle contained a blood-red liquid and on it was the lable MAHA CUCKUDA MAMSA THAILAM.
As I boast about my knowledge of Sanskrit, I went on to translate the name. Maha- big; Cuckuda- cock; Mamsa-flesh;Thailam-oil
So it is oil made up of the flesh of a big fat cock. How can a non-veg preparation enter an Achara Iyer house? I was bewildered.
But my husband was looking at me pathetically, and I could not see him suffer any more with pain.So I relaxed the rule and told him to use it anyway as it was only an external application.But it should be kept in the washroom and should not be brought to other areas of the house. He obliged and he became better slowly.
Next time when my husband met his friend they must have discussed what happened at home. The friend told that as far as he knew the medicine was only herbal and no other thing.
But why the name? I chanced to see a cock while travelling in a rural area. and lo! Suddenly it struck me.I saw the cock freely rotating its neck in all directions almost 360 degrees. One who is using the medicine will get strong neck muscles as that of the cock and will be able to turn freely without strain. Hence the name Maha Cuckuda Mamsa Thailam!
Thus I got my pride of Sanskrit knowledge shattered.

Wednesday 22 March 2017

பெண்பால் புலவர்கள்



"இந்த வாரம் ஆனந்தவிகடன் வாசித்தீர்களா? " என்று ரயில் நிலையத்தில் விளம்பரம் செய்யப்பட்ட காலத்திலிருந்து தொடர்ந்து 'விகடன்' வாசிப்பவள்  நான்.
  ஆனந்தவிகடன் மிகவும் மாறிவிட்டது. நல்ல மாற்றம் நிறைய இருக்கிறது

சில வாரங்களாக "ஆண்பால் பெண்பால் .அன்பால் "என்ற கட்டுரைத்தொடரை விரும்பி வாசித்து வருகிறேன்.

15/03/2017 தேதியிட்ட விகடனில் கவிதா முரளீதரன் அவர்கள் பல கருத்துக்களைக் கூறியுள்ளார்.
தனது பெண்ணியக் கருத்துக்களுக்கு பலம் சேர்க்க ஒரு குழந்தைப்பாடலை துணைக்கு அழைத்துள்ளார்."தோசையம்மா தோசை" என்ற அழ வள்ளியப்பாவின் பாடல் அது. அம்மாவுக்கு மூன்று தோசை, அப்பாவுக்குக் கூடுதலாக ஒன்று என்றும் ,பாடலின் கடைசி வரியில் தின்னதென்ன ஆசை இன்னும் கேட்டால் பூசை என்று வருவதை "பெண் குழந்தை கூடுதலாக ஒரு தோசை கேட்டால் பூசை என்று சிறுவர் பாடலிலும் ஆண்களுக்கான அதிகாரங்களைக் கொஞ்சம் கூடுதலாக வரையறுத்துக்கொடுக்கும் இந்தச் சமூகம்" என்றும் குறிப்பிடுகிறார்.
உண்மையில் இந்தப்பாடலின் நோக்கம் அதுவல்ல.ஆங்கிலத்திலேயே ரைம்ஸ் எனப்படும் பாடல்களைப்  பாடிவந்த குழந்தைகள் அவர்களுக்குப் புரிந்த தாய்மொழியில் எண்களையும் எழுத்தையும் ஓசையினூடே அறிமுகம் செய்துகொள்ள எழுதப்பட்ட பாடல் இது.."பாப்பாவுக்கு ஒன்று "என்பதை மிகச்சிறிய குழந்தைக்கு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.அக்குழந்தை ஒன்றுக்குமேல் சாப்பிட்டால் உடம்புக்கு ஆகாது என்பதால் தாய் செல்லமாக பூசை என்று பொய்க்கோபம் காட்டுகிறாள்.பூசை கிடைக்கும் என்று அதட்டுதல் பேச்சுத்தமிழில் செல்லக்கோபத்தையே குறிக்கும் .
       
       இந்தக்கவிதையை எழுதிய திரு. அழ வள்ளியப்பா அவர்கள் சிறந்த கவிஞர் ,எழுத்தாளர்,பெண்கள் முன்னேற்றத்திற்குத் தன் எழுத்தாலும் செயலாலும் பாடுபட்டவர்.
      அவரை கவிஞராக மட்டுமின்றி ஒரு மாமனிதராகவும் நான் அறிவேன்.
நான் பணிபுரிந்த வங்கியில் உயர் அதிகாரியாக இருந்தவர்.
   
        அந்தக்  காலத்தில்வங்கிக்கணக்கு தொடங்க  எழுதப் படிக்கத்தெரியாத பெண்களுடன் கைநாட்டுதான் போடுவார்கள் என்று கூறி உடன் அழைத்துவந்த கணவன்மார்களை சிறு கோபத்துடன் அணுகியவர்.
வந்த பெண்மணியிடம் "அம்மா உங்களுக்கு கோலம் போடத்தெரியுமா" என்று கேட்பார்."புள்ளிக் கோலம் எல்லாம் போடுவேன் ஐயா" என்று உற்சாகமாக பதில் வரும்.அவர் கணவரிடம் "உங்கள் மனைவி ஒரு வாரத்திற்குள் அவர் பெயரை எழுத கற்றுக் கொள்வார்.கற்றுக் கொடுத்து அழைத்து வாருங்கள் " என்பார்.அவ்வாறே செய்வார் அவர்கள்.அந்தப் பெண்மணி கையெழுத்துப் போட்டு வங்கிக்கணக்கு துவங்குவார்.

  இப்படி எத்தனையோ  பெண்களுக்கு எழுத்தறிவித்தார் அழ  வள்ளியப்பா.

இன்னும் பெண்கள் பெண்குழந்தைகள்மீது அவர் கொண்டிருந்த அன்பு பற்றி எத்தனையோ கூறலாம்

      நான் அவருடன் பணிபுரிந்தபோது ,நான் பெண் என்பதாலேயே மறுக்கப்பட்டிருந்த சில உரிமைகளை எனக்குப் பெற்றுத்தந்தார்.

      நான் வளைகாப்பு முடிந்து பணிக்குதிரும்பியபோது "அழகான பெண்குழந்தை பிறக்கவேண்டும்" என்று வாழ்த்தினார் ."என்ன சார் எல்லோரும் ஆண்குழந்தை என்று வாழ்த்துகிறார்களே" என்றேன்.அதற்கு அவர் "பெண்குழந்தைகள்தாம் இன்பம் தருவர். நான் நான்காவது  பெண்குழந்தை பிறந்தபோதுகூட மகிழ்ச்சியே அடைந்தேன்"என்றார்

இவ்வளவு கூறத்தேவையில்லை அவரது பாடல் மூலமே தெளிவு பெறுவோம்.
"லட்டும் தட்டும்" என்ற தலைப்பிட்ட பாடலில் பட்டு கிட்டு என்ற தங்கை அண்ணன் இருவரும் எட்டு லட்டுக்களை தலைக்கு நான்காக பங்கிட்டு உண்பதாகப் பாடுகிறார்.ஆணும் பெண்ணும் சமம் என்பதே அவரது கொள்கை
   தோசைப்பாடலை முழுவதும் படித்தால் அதில் அம்மா எவ்வாறு தோசை சுட்டு அன்புடன் பகிர்ந்து தருகிறாள் என்பதும் அதிகம் உண்டால் சிறு குழந்தைக்கு ஆகாது என்பதால் "பூசை" என்றுகண்டிக்கிறாள் என்பதும் புரியும்..இது வாழ்வியல்.
பெண்ணியம் என்பதை வெறும் பேச்சிலும் எழுத்திலும் மட்டுமல்ல,செயலிலும் காட்டியவர் அமரர் திரு அழ வள்ளியப்பா
.



Saturday 4 February 2017

சடங்கு

சடங்கு

சடங்கு என்கிற தமிழ்ச் சொல்லைப்பற்றி ஒரு நாள் இரவு உறக்கம் வராதபோது சிந்தித்துக்கொண்டிருந்தேன் .
ஷடங்க என்ற வடமொழிச்சொல்லிலிருந்து அது தோன்றியிருக்கலாம் என எண்ணினேன். மறுநாள் காலை கூகுள் தேடலில் என் எண்ணம் உறுதியாயிற்று. வேதாங்கங்கள் ஆறு .அவையே ஷடங்கம் எனப்படுகின்றன  .அவை; சிட்சா ,சந்தஸ் ,வ்யாகரணா ,நிருக்தம் ,கல்பம் ஜ்யோதிஷம்  என்பவை. இவற்றுள் கல்பம் என்பது வேதம் சார்ந்த செயல்முறைகளை வகுத்துக்கொடுப்பது . அதாவது பிறப்பு முதல் இறுதிவரை செய்யவேண்டிய கர்மாக்களை விளக்குவது .இதன்படி செய்பவை கல்பம் எனப்படும் ஆறங்கத்துள் விளக்கப்பட்டுள்ளதால் அதன் பெயரே சடங்கு (ஆறங்கம்) என்று நிலைபெற்றுவிட்டது .
சடங்கு என்னும் சொல் வெற்றுச் சம்பிரதாயம் ,பொருளற்ற பழக்கம் என்ற பொருளிலேயே பெரும்பாலும் ஆளப்படுகிறது .ஆனால் பல சடங்குகள் காலம் காலமாக பின்பற்றப்படுபவை பொருள்பொதிந்தனவாகவே இருக்கின்றன.
உதாரணத்திற்கு  திருமணவிழா அல்லது மற்ற புனித விழாக்களில் முளைப்பாரி எடுத்தலை குறிப்பிடலாம் .பயிர் செழித்து வளருவதுபோல இல்லறம் சிறக்கவேண்டும் ,எடுத்த நல்லகாரியம் ஓங்கி வளரவேண்டும் என்பதன் குறியீடே  முளைப்பாரி .
சடங்குகளை செய்யும்போது பொருள் அறிந்த பெரியோரிடம் கேட்டு அறிந்துகொள்வது நல்லது.
சடங்குகள் வெற்று சம்பிரதாயங்கள் அல்ல .அவை நம்மை படிப்படியாக ஆத்மானுபவத்திற்கு அழைத்துச்செல்பவை என்கிறார் பூஜ்யஸ்ரீ மஹாஸ்வாமிகள் (பார்க்க " தெய்வத்தின் குரல்  முதல் பாகம் - கர்ம மார்க்கம் -சடங்குகள் )

http://www.kamakoti.org/tamil/part1kural91.htm

Friday 26 August 2016

" நல்ல " விஷயம்

" நல்ல " விஷயம் 


என் நண்பர் பகல் பன்னிரண்டு மணிக்கு உள்ளே நுழைந்தார் . அவரை அமரச்செயது  தண்ணீர் கொடுத்த நான் கேட்ட முதல் கேள்வி "என்ன இது நல்ல வெய்யிலில் கிளம்பினீர்கள்?" என்பதுதான்."என்னம்மா செய்வது ?
காலையில் கிளம்பினேன், பல வேலைகளை முடிக்கவேண்டியிருந்தது " என்றார்

பிறகு  பேசிக்கொண்டிருக்கையில் அவரது மற்றொரு நண்பரின் மகளுக்கு திருமணம் செய்ய பார்த்துக்கொண்டிருப்பதாகவும் , நல்ல வரன் தெரிந்தால் சொல்லுமாறும் கூறினார்.   நானும் நல்ல பையனாக நல்ல வேலை நல்ல சம்பளத்தில் இருப்பவன் காதில் பட்டால் சொல்கிறேன்  என்றேன்.

சென்ற  பெருமழையின்போது  அவரது வீடு சேதமடைந்தது, அதைப்பற்றி  பேசுகையில் தான் அப்போது வெளியில் சென்று நல்ல மழையிலும் வெள்ளத்திலும் மாட்டிக்கொண்டதை நினைவுகூர்ந்தார். அதன்பிறகு அவருக்கு ஜுரம் வந்தது. அதுவும் நல்ல  ஜுரம்!

முதல் பாராவிலும் மூன்றாவது பராவிலும் உள்ள நல்ல வற்றுக்கெல்லாம்  அதற்கு நேர் எதிரான பொருள் என்பதை யாவரும் அறிவீர்கள்.இரண்டாவது பாராவில் நான்கு  நல்ல உள்ளன. அவற்றில் முதல் மூன்றுக்கும்  உயர்ந்த என்ற  பொருளும்  நான்காவதற்கு  மிகுந்த , நிறைய  என்ற பொருளும்  உள்ளன.

இன்னும்  பலவற்றுக்கு நல்ல அடைமொழி  கொடுக்கப்படுகிறது . "நல்ல"  பாம்பு  எதில்  நல்லது? விஷத்திலா?

நாம் சமையலில் பயன்படுத்தும் மிளகை நாகர்கோயில்  தமிழர்கள்  நல்ல மிளகு  என்கிறாரகள். மிளகாயை  மிளகு என்று அடைமொழியின்றி  குறிப்பிடுகிறாரகள். மிளகின் மருத்துவ  குணம் பற்றி  அதற்கு  நல்ல  பெயர் கொடுத்தார்கள் போலும்!

இறைவன்  நமது உள்ளத்தில் குடியிருநதால் எல்லாமே நல்லவைதாம் என்று
தமிழ் விரகர் ஞானசம்பந்தர்  தமது கோளறு பதிகத்தில் சொல்கிறாரார். ஒவ்வொரு பாடலிலும் நல்ல நல்ல  அவை நல்ல நல்ல  என்று   நான்கு  நான்கு  முறை  அறுதியிட்டுக்கூறுகிறார். பல இடங்களில் தமது பாடல்களில் நல்ல  என்ற சொல்லை பயன்படுத்துகிறார். நல்ல  என்ற சொல்  மங்கலத்தைக்குறிக்கும் . பல நேரங்களில் உரையாடல்களில் " சரி " என்பதற்கு  பதில்  "நல்லது" என்ற சொல்லை  பெரியோர்  பயன்படுத்துவதைக்  கேட்டிருக்கலாம்.

 நல்லது , நான் விடைபெறுகிறேன் . அனைவரும் மண்ணில் நல்ல வண்ணம்  வாழ  வாழ்த்துகிறேன்